வெள்ளி, 18 ஜூலை, 2014

5. வாணிகர்

வாணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில்ஆங் கிலமா வேண்டும்?
'
மாணுயர்ந்த செந்தமிழால் வரைகஎன அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கையாமோ
? 21

உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண்டும் போலும்! உயாந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்கு ஷாப்எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லைதோப்பில் நிழலா இல்லை?தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்த்தானில்லை!
22

"
பவன்" "மண்டல்" முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல் யாவும்
இவண்தமிழிற் கலப்பதுண்டோ "பிராம்மணர் கள்உண்ணும் இடம்" இப்பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே. 
23

அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றிஅச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையுமாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?குறியுற்ற மறவர்களே! இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும். 
24

பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும் பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு! வீதியெல்லாம் வரிசையுற உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டுபைந்தமிழ்க்குச் செயும்தொண்டு பருகவாரீர் 
25

4. மங்கையர் முதியோர் எழுக!

ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழ்ப்பெண்களெலாம் எழுக! உங்கள்
திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும்!
மறுமலர்வாய்த் தாமரையும் கனியுதடும், நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்!
16

நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெல்லாம் பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ் சுருக்கும்
மகிழ்வான மலர்க்கன்னம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும்.
17

தண்டூன்றும் முதியோரே! தமிழ்த்தொண்டென் றால்இளமை தனை எய்தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால் மண்டுநறும் பொடிசிதறும் பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால் பச்சைமயில் போல்வந்து தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய் கொண்டகுறை தவிர்ப்பதற்குக் குதித்து வாரீர்!
18

பிரம்புவளை மெய்யுடையீர் ஆருயிரில் வாரியிட்டுப் பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டீரோ!
இரங்குநிலை கொண்டதமிழ் ஏற்றகுறை தவிர்த்திடநீர் எழுச்சி கொள்வீர். 19



அன்னையினை எதிர்த்தார்க்கும் அவள்மேன்மை மறந்தார்க்கும் அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல் மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச் சாரைச்சிற் றெறும்பென்னத் தமிழ் நாட்டீரே,
முன்னைவைத்து காலைப்பின் வையாமே வரிசையுற முடுகு வீரே!
20

திங்கள், 30 ஜூலை, 2012

3. வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்!
கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பை! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!
உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாம டைந்த
துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்
செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே,
வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை உன் பெருமை!
வயிற்றுக் கூற்றக்
கூழின்றி வாடுகின்றார்,
எழுந்திருநீ! இளந்தமிழா
குறை தவிர்க்க
ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
பொருள் சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்கு விப்பாய்!
ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,
உணர்திடுக தமிழுக்குத்
வருந்தீமை உனக்கு வரும்
தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!
பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,
எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித்
தமிழ்க்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்!
இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

புதன், 16 மே, 2012

2. இருப்பதைவிட இறப்பது நன்று


வாணிகர்க்கும் தமிழென்றால்
வெறுப்புண்டோ? அரசியல்சீர்
வாயக்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ?
அரும்புலவர் ஊமைகளோ?
இல்லறத்தைப்

பேணுமற்ற யாவருமே
உணர்வற்றுப் போனாரோ?
பெருவாழ் வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத
தமிழர் உயிர் வாழ்வதிலும்
இறத்தல் நன்றே,


மிகுகோயில் அறத்தலைவர்,
அறநிலையக் காப்பாளர்,
விழாவெ டுப்போர்,

தகுமாறு மணம்புரிவோர்,
கல்விதரும் கணக்காயர்
தம்மா ணாக்கர்,
நகுமாறு நந்தமிழை
நலிவுசெய்யும் தீயர்களோ?
நல்வாழ் வுக்கோர்
புகுமாறு புறக்கணித்தும்
தமிழர் உயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர்
மாத்தமிழை மாய்ப்பதுண்டோ?
வாய்ப்பாட் டாளர்,
இகழ்ச்சியுற நடப்பதுண்டோ?
இசைப்பாடல் ஆக்குபவர்
இழிவேன் ஏற்றார்?

நகச்சிலசொற் பொழிவாளர்
நாணற்றுப் போயினரோ?
வாழ்வுக்கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே,

கூற்றமென வாழ்வதுவோ
தமிழுக்கே ஏடெழுதும்
கூட்டம்? தீமை

மாற்றவரும் அச்சகத்தார்
வகைமறந்து போனாரோ?
சொல்லக் கத்தார்
தூற்றுமொழி ஏன் சுமந்தார்?
துண்டறிக்கை யாளருமோ
தீயர்? வாழ்வில்

ஏற்றமுற எண்ணாத
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே

நல்லஅரும் பொருளுடையார்
நந்தமிழ்க்கோ பகையாவார்?
நாட்டில் ஆணை

சொல்லவரும் அரசியலார்
செந்தமிழ்நா டிதுவென்றும்
தெரியார் போலும்!

வல்லவரும் பெரிய நிலை
வாய்த்தவரும் என் செய்தார்?
இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.