வாளினை எடடா!



வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்; கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமே உழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக